அன்பானவர்களே, "உன்னோடு வழக்காடுகிறவர்களோடே நான் வழக்காடி, உன் பிள்ளைகளை இரட்சித்துக்கொள்ளுவேன்" (ஏசாயா 49:25) என்பதே இன்றைக்கான வாக்குத்தத்த வசனமாகும். நம் தேவனாகிய கர்த்தரிடமிருந்து வரும் இந்த வார்த்தை எவ்வளவு ஆறுதலை தருகிறது! மக்கள், சூழ்நிலைகள் உங்களுக்கு விரோதமாக எழும்பும்போது, பயம் உங்களை மேற்கொள்ளும்போது யுத்தம் உங்களுக்குக் கடினமாக தோன்றலாம். ஆனாலும் கர்த்தர், "நீ தனியே இல்லை. நான் உனக்காக யுத்தம் செய்வேன்," என்று கூறுகிறார். தம் பிள்ளைகள் தாக்கப்படும்போது தேவன் சும்மா அமர்ந்திருக்கமாட்டார். அவர் உங்கள் சார்பாக பயங்கரமான பராக்கிரமசாலியாக எழும்புவார். உங்களுக்கு விரோதமாக நிற்பவர்களுக்கு எதிராக தேவன் எழும்புவார். உலகம் இதைக் காணக்கூடாமல் இருக்கலாம். ஆனாலும் காணாதவிதத்தில் தேவன் எல்லா தருணங்களிலும் கிரியை செய்து உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் காப்பார். செங்கடலை பிளந்து இஸ்ரவேலருக்காக யுத்தம் செய்து பார்வோனின் சேனையை அதம்பண்ணிய அதே தேவன் உங்களுக்காகவும் யுத்தம்பண்ணுவார். அதே வல்லமை இன்று உங்களுக்காகவும் யுத்தம்பண்ணும்.

சூழப்பட்டுள்ளதாக, உதவியற்றதாக நீங்கள் நினைத்தால், யுத்தம் உங்களுக்குரியதல்ல - கர்த்தருக்குரியது என்பதை மறந்துபோகாதிருங்கள். வேதம், "அவர்கள் உனக்கு விரோதமாக யுத்தம்பண்ணுவார்கள்; ஆனாலும் உன்னை மேற்கொள்ளமாட்டார்கள்; உன்னை இரட்சிக்கும்படிக்கு நான் உன்னுடனே இருக்கிறேன்" (ஏரேமியா 1:19) என்று கர்த்தர் சொல்வதாகக் கூறுகிறது. ஆம், பொல்லாதவர்கள் உங்களுக்கு விரோதமாக எழும்பக் கூடும்; அவர்கள் உங்களுக்கு எதிராக ஆலோசனை பண்ணக்கூடும். ஆனாலும், அவர்கள் தோற்றுப்போவார்கள். ஏனென்றால், நீங்கள் தேவனின் பிள்ளையாக இருக்கிறீர்கள். தேவனுடைய கரத்தால் வரையப்பட்ட கோட்டினை தாண்டி சத்துருவால் உங்களைத் தொட இயலாது. வேதம், "இதோ, உனக்கு விரோதமாய்க் கூட்டங்கூடினால், அது என்னாலே கூடுகிற கூட்டமல்ல; எவர்கள் உனக்கு விரோதமாய்க் கூடுகிறார்களோ, அவர்கள் உன் பட்சத்தில் வருவார்கள்" (ஏசாயா 54:15) என்று கூறுகிறது. ராஜாவாகிய அபிமலேக்கு ஈசாக்கின் முன்பு பணிந்து, "கர்த்தர் நிச்சயமாய் உம்மோடிருக்கிறார் என்பதை கண்டுகொண்டோம்" என்று கூறினான். அவ்வாறே தேவன் உங்களோடிருப்பதாக உங்கள் சத்துருக்கள் அறிக்கையிடுவார்கள். ஈசாக்கை பாதுகாத்து, அவன் ஆசீர்வாதங்களை நூறு மடங்காய் பெருகப்பண்ணின அதே தேவன் உங்களையும் காத்து வர்த்திக்கப்பண்ணுவார். அவர் உங்கள் பிள்ளைகளையும் தீங்கிலிருந்து காத்துக்கொள்வார். கர்த்தரின் கரம் உங்கள் குடும்பத்தை அக்கினி மதில்போல சூழ்ந்துகொள்ளும்.

ஆகவே, தேவ பிள்ளையே, பயப்படாதிருங்கள். நிலைத்து நின்று கர்த்தர் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள். சங்கீதக்காரன், "கர்த்தர் தாமே நமது பக்கத்திலிராவிட்டால், அவர்கள் கோபம் நம்மேல் எரிகையில், நம்மை உயிரோடே விழுங்கியிருப்பார்கள்" (சங்கீதம் 124:2,3) என்று கூறுகிறான். மெய்யாகவே கர்த்தர் உங்கள் பட்சத்தில் இருக்கிறார். மக்கள் கேலி செய்யும்போது, தேவன் உங்களை உயர்த்துவார். விரோதிகள் உங்களை தள்ளுவதற்கு சதியாலோசனை செய்யும்போது, தேவன் அதை பதவி உயர்வாக மாற்றுவார். வேதம், "என்னைச் சுற்றிலும் வளைந்துகொள்ளுகிறார்கள்; கர்த்தருடைய நாமத்தினால் அவர்களைச் சங்கரிப்பேன்" (சங்கீதம் 118:11) என்று கூறுகிறது. இன்றைய உங்கள் ஜெய அறிக்கை இதுவே! உங்கள்பேரில் அன்புகூருகிற கிறிஸ்துவின் மூலமாக நீங்கள் முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறீர்கள் (ரோமர் 8:37). அவரை துதியுங்கள்; அவரில் அன்புகூருங்கள்; அவரை தொழுதுகொள்ளுங்கள். "என் பிதா இதுவரைக்கும் கிரியைசெய்துவருகிறார், நானும் கிரியைசெய்துவருகிறேன்," என்று இயேசு கூறியதை மறவாதிருங்கள் (யோவான் 5:17). தேவன் இன்னும் கிரியை செய்துகொண்டிருக்கிறார் - கண்ணுக்குத் தென்படாத யுத்தங்களை செய்கிறார்; உங்களுக்கு அன்பானோரை பாதுகாக்கிறார்; உங்களை திடமாக நிற்கும்படி செய்கிறார்.

ஜெபம்:
அன்பு பரம தகப்பனே, எனக்காக எல்லா யுத்தங்களையும் நடத்துகிறதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். நீரே என்னை தற்காக்கிறவர், என் கேடகம், என் பெலத்த துருகம். ஆண்டவரே, என்னோடு வழக்காடுகிறவர்களோடே வழக்காடும். என் பிள்ளைகளை எல்லா தீமையிலிருந்தும் ஆபத்திலிருந்தும் பாதுகாத்துக்கொள்ளும். போராட்டங்களின் நடுவே என் உள்ளத்தை விசுவாசத்தாலும் சமாதானத்தாலும் நிரப்பிடும். எனக்கு விரோதமாக உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோகட்டும். எல்லா தாக்குதலையும் உம் வல்லமைக்கு சாட்சியாக மாற்றிடும். என் சமாதானத்தை காத்துக்கொள்ளவும், உம் பலத்த கரத்தின்மேல் நம்பிக்கையாயிருக்கவும் எனக்கு உதவி செய்யும். என் வாழ்க்கை உம் பரிசுத்த நாமத்திற்கு மகிமை கொண்டு வருவதாக அமையட்டும் என்று இயேசுவின் வல்ல நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.