அன்பானவர்களே, இந்த மாதத்தின் இறுதிக்கு வந்திருக்கிறோம். தேவன் உங்களை நிச்சயமாகவே ஆசீர்வதித்து உயர்த்தியிருப்பார் என்று நம்புகிறேன். இன்றும் அவர் நமக்கு, "என் தேவனுடைய தயவுள்ள கரம் என்மேல் இருந்தபடியால், ராஜா அவைகளை எனக்குக் கட்டளையிட்டார்" (நெகேமியா 2:8) என்ற ஆச்சரியமான வாக்குத்தத்தத்தைக் கொடுத்திருக்கிறார். எவ்வளவு வல்லமையான சத்தியம்! ராஜாதி ராஜாவும் கர்த்தாதி கர்த்தாவுமான அவரின் தயவுள்ள கரம் நம்மேல் வரும்போது, இவ்வுலகின் ராஜாக்களின் பெருத்த தயவு தானாக நமக்குக் கிடைக்கிறது. அவர்களின் கண்களில் தேவன் நமக்கு தயவு கிடைக்கப்பண்ணுகிறார். உலகின் மிகப்பெரியவரிடமிருந்து நீங்கள் தயவைப் பெற்றுக்கொள்கிறீர்கள். இன்னும் என்ன நமக்குத் தேவை? இதைச் சொல்லும் அவர், சகலருக்கும் ஆண்டவராய், சகலருக்கும் ராஜாவாய் இருக்கிறார்.

ஆகவே, அன்பானவர்களே, அவருக்குப் பிரியமானவிதத்தில் நாம் வாழவேண்டும். தேவனிடமிருந்து இந்த தயவைப் பெற்றுக்கொள்வதற்கு, அவருடைய தயவுள்ள கரம் நம்மேல் அமருவதற்கு, நாம் அவருக்குப் பிரியமானவிதத்தில், அவருக்குக் கீழ்ப்படிந்து, உண்மையாயும் உத்தமமாயும் அவருக்கு ஊழியம் செய்து, அவரை நேசித்து, எப்போதும் அவரை நம்மோடு வைத்துக்கொண்டு, அவரில் பிரியமாயிருந்து அவரது வார்த்தைகளை வாசிக்கவேண்டும். இப்படி நாம் தேவனுடன் உலாவும்போது, நாம் அவருடைய பிள்ளையாவதால் அவரின் தயவுள்ள கரம் நம்மேல் அமரும். அப்படிப்பட்டவர்களுக்கு தேவன் பெரிய கதவுகளைத் திறக்கிறார்.

என் தந்தை விமானத்தில் சென்றுகொண்டிருக்கும்போது, நடு வானில் ஆண்டவர் அவர் உள்ளத்தில், "போய் நாட்டின் பிரதமரை பார்," என்று கூறினார். அவருக்கு அதற்கு முன்னர் பிரதமரை தெரியாது. அவரிடம் நேரம் வாங்குவதற்கு எந்த வழியும் இல்லை. ஆனால், ஆண்டவர் கூறியதை என் தந்தை செய்தார். ஆச்சரியவிதமாக சில மணி நேரத்துக்குள்ளேயே பிரதமரின் ஒப்புதல் கிடைத்தது. தமது இல்லத்தின் கதவுகளை பிரதமரே திறந்து ஆவலுடன் என் தந்தையை வரவேற்றார். பிரதமர் வெகுநேரம் அவருடன் பேசிக்கொண்டிருந்தார். என் தந்தை கிளம்பும்போது, பிரதமர் எழுந்து அறையின் வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்தார். அப்படிப்பட்ட பெரிதான கிருபை என் தந்தையின்மேல் இருந்தது. நீங்கள் கர்த்தரின் ராஜ்யத்திற்காக ஓடும்போது, ராஜாக்கள் கதவைத் திறந்து உங்களை வரவேற்பார்கள். அந்த தயவை நீங்கள் பெற்றுக்கொள்ளும்போது, அது ராஜாவிடமிருந்தோ எந்த மனுஷனிடமிருந்தோ வராமல் தேவனிடமிருந்தே வருவதால் எப்போதும் அவரை ஸ்தோத்திரியுங்கள்.

ஜெபம்:
அன்புள்ள தகப்பனே, உம் தயவுள்ள கரம் என் வாழ்க்கையின்மேல் அமரட்டும். அனுதினமும் உமக்குக் கீழ்ப்படிந்து, உம்மை நேசித்து, உமக்கு ஊழியம் செய்து, உம்முடன் நடந்து உமக்குப் பிரியமானவிதத்தில் வாழ்வதற்கு எனக்கு உதவும். என் வாழ்க்கை உம் நாமத்திற்கு மாத்திரமே மகிமை கொண்டுவருவதாக இருக்கட்டும். நீர் மாத்திரமே திறக்கக்கூடிய கதவுகளை தயவாய் எனக்குத் திறப்பீராக. பரலோகத்திலிருந்து மாத்திரமே வரக்கூடிய தெய்வீக தயவை எனக்கு தந்தருளும். நான் பெற்றுக்கொள்ளும் எல்லாவற்றையும் உமக்கே திரும்ப தரும் வாய்ப்பை அருளவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.