எனக்கு அருமையான தேவ பிள்ளையே, இன்றைக்கு, "துன்மார்க்கனுக்கு அநேக வேதனைகளுண்டு; கர்த்தரை நம்பியிருக்கிறவனையோ கிருபை சூழ்ந்துகொள்ளும்" (சங்கீதம் 32:10) என்ற வாக்குத்தத்த வசனம் கொடுக்கப்பட்டுள்ளது. வேதம், "நான் உம்முடைய கிருபையின்மேல் நம்பிக்கையாயிருக்கிறேன்" என்றும், "பூமிக்கு வானம் எவ்வளவு உயரமாயிருக்கிறதோ, அவருக்குப் பயப்படுகிறவர்கள்மேல் அவருடைய கிருபையும் அவ்வளவு பெரிதாயிருக்கிறது," என்றும் கூறுகிறது (சங்கீதம் 13:5; 103:11)
நீங்கள் எந்த அளவுக்குத் தேவனுக்குப் பயப்படுகிறீர்கள்? தேவனுடைய இரக்கத்திற்காக எந்த அளவு காத்திருக்கிறீர்கள்? வேதம், "அதிகாலையில் உமது கிருபையைக் கேட்கப்பண்ணும், உம்மை நம்பியிருக்கிறேன், நான் நடக்கவேண்டிய வழியை எனக்குக் காண்பியும்; உம்மிடத்தில் என் ஆத்துமாவை உயர்த்துகிறேன்," (சங்கீதம் 143:8) என்று கூறுகிறது. வேதம், "தேவனே, நீர் என்னுடைய தேவன்; அதிகாலமே உம்மைத் தேடுகிறேன்; வறண்டதும் விடாய்த்ததும் தண்ணீரற்றதுமான நிலத்திலே என் ஆத்துமா உம்மேல் தாகமாயிருக்கிறது, என் மாம்சமானது உம்மை வாஞ்சிக்கிறது. இப்படியே பரிசுத்த ஸ்தலத்தில் உம்மைப்பார்க்க ஆசையாயிருந்து, உமது வல்லமையையும் உமது மகிமையையும் கண்டேன்" (சங்கீதம் 63:1,2) என்று கூறுகிறபடி, நாம் தேவனை காலையில் தேட வேண்டும்.
ஆம், அன்பானவர்களே, அனுதினமும் தேவனுடைய வார்த்தையை எவ்வளவு நேரம் வாசிக்கிறோம்? கர்த்தரின் முகத்தை எவ்வளவு நேரம் தேடுகிறோம்? தாவீதைப்போல காலையில் எழும்பவேண்டும். தேவனுடைய மகிமைக்காக, எழும்பி பிரகாசிக்கவேண்டும். தேவனுடைய வார்த்தையை வாசிக்கும்போது, அவரது சமுகம் உங்கள் வாழ்வை நிரப்பும். அவரை முழுமையாய் நம்பும்போது, நீங்கள் ஒருபோதும் அசைக்கப்படுவதில்லை. கர்த்தர் உங்களோடு இருப்பார். நம் வாழ்க்கையை அர்ப்பணித்து, அவ்விதமான மகிமையானதாய் மாற்றும்படி கேட்போம். இந்த அழகான வாழ்க்கையை நமக்கு அளிக்கும்படி ஜெபித்து கேட்போம்.
ஜெபம்:
எங்கள் அருமையான பரம தகப்பனே, நாங்கள் நடக்கவேண்டிய வழியைக் காட்டுவதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். தகப்பனே, காலையில் உம்மை தேடும் கிருபையை எனக்குத் தந்தருள்வீராக. இயேசுவைப்போன்று, உம் தாசனாகிய தாவீதைப்போன்று காலையில் உம்மைத் தேடுவேனாக. அனுதினமும் உம் சமுகத்தை வாஞ்சிக்கவும், உம் வார்த்தையை நேசிக்கவும் எனக்கு உதவி செய்யும். உம்மை நம்பும் யாவரையும் உம் இரக்கம் சூழ்ந்துகொள்வதாக. இவ்வுலகின் உபத்திரவங்களால் அசைக்கப்படாமல் எங்களைக் காத்தருளும். எங்கள் இருதயங்களை கிருபையினால் நிரப்பி, எங்கள் நடைகளை வழிநடத்தி, உம் பாதைகளில் நடப்பதற்கு உதவும். உம் சமுகம் எங்கள் வாழ்க்கையை நிறைத்து, மகிமையான வாழ்வுக்குள் நடத்துவதாக. தகப்பனே உமக்கு ஸ்தோத்திரம். இயேசுவின் அருமையான நாமத்தில், இப்போதே அதைப் பெற்றுக்கொள்கிறோம் என்று ஜெபிக்கிறோம், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


