அருமையானவர்களே, "ஆண்டவரே, என் தியானம் உமக்குப் பிரியமாய் இருப்பதாக," என்ற நேர்த்தியான ஜெபத்தை ஏறெடுப்போம். சங்கீதக்காரன், "நான் அவரைத் தியானிக்கும் தியானம் இனிதாயிருக்கும்; நான் கர்த்தருக்குள் மகிழுவேன்" (சங்கீதம் 104:34) என்று கூறுகிறான். அதாவது, "நான் கர்த்தருக்குள் களிகூருவேன். என் தியானம் ஆண்டவருக்குப் பிரிமாயிருக்கும்," என்பதே இதன் அர்த்தம். நீங்கள் கவலைப்படுவதை ஆண்டவர் இயேசு விரும்புவதில்லை. அவர், "என் பிள்ளையே, கவலைப்படாதே. கவலைப்படுகிறதினால் ஒரு முழத்தைக் கூட்ட முடியுமா? ஏன் கவலைப்படுகிறாய்?" என்று கேட்கிறார். உங்கள் கவலைகள் எல்லாவற்றையும் கர்த்தர்மேல் வைத்துவிடுங்கள். இயேசுவின் இருதயம், "என் பிள்ளை கவலைப்படக்கூடாது. என் பிள்ளை, நான் நல்ல தேவன். நான் அவர்கள் இரட்சகர்; அவர்களோடிருக்கும் தேவன். அபிஷேகிக்கப்பட்டவர். அவர்களுக்கு வேண்டியவற்றை அருளிச்செய்கிறவர் என்று கூறி, எப்போதும் என்னில் மகிழ்ந்திருக்கவேண்டும்,"  என்றே விரும்புகிறது. நாம் இதை உணர்ந்துகொள்ளவேண்டும்.

இந்த அன்பான ஆண்டவர் இயேசுவை நீங்கள் ஏற்றுக்கொண்டு அவருக்குள் களிகூர்ந்தால் உங்கள் தியானம் அவர் பார்வையில் பிரியமானதாயிருக்கும். அதை எப்படிச் செய்வது? வேதம், தேவனுடைய நன்மையை நீங்கள் தியானித்து களிகூரும்போது, அது புத்தியை கொடுக்கும்; செல்லவேண்டிய வழியைக் காட்டும் என்று கூறுகிறது (சங்கீதம் 49:3). நீங்கள் களிகூர்ந்து ஆண்டவரைத் துதிக்கும்போது, உங்களுக்குள் பரிசுத்த ஆவியானவர் எழும்புவார். அவர், தேவனுடைய திட்டத்தில் உங்களை நடத்துவார். வேதம், நீங்கள் தியானிக்கும்போதும் கர்த்தருக்குள் களிகூரும்போதும் வாயின் வார்த்தைகள் வெளிப்படும்; தேவன் உங்கள் ஜெபத்திற்கு பதில் அளிப்பார் என்று கூறுகிறது (சங்கீதம் 19:14). பலவேளைகளில் நாம், "எப்படி ஜெபிப்பது என்று எனக்குத் தெரியாது," என்று கூறுகிறோம். நம் குறைகளை, முறுமுறுப்புகளை, பெருமூச்சுகளை  கொட்டுகிறோம். தேவனை கேள்வி கேட்கிறோம். தேவனுடைய நன்மைகளில் களிகூர்ந்து தியானிக்கும்போது, தேவனின் திட்டத்தை விளக்கும் வார்த்தைகளை நம் வாயினால் பேசும்போது, ஜெபத்திற்கு தேவன் பதில் அளிக்கிறார்.

வேதம், "இந்த நியாயப்பிரமாண புஸ்தகம் உன் வாயைவிட்டுப் பிரியாதிருப்பதாக; இதில் எழுதியிருக்கிறவைகளின்படியெல்லாம் நீ செய்யக் கவனமாயிருக்கும்படி, இரவும் பகலும் அதைத் தியானித்துக்கொண்டிருப்பாயாக" (யோசுவா 1:8) என்றும், தேவ பிரசன்னத்தை நீங்கள் உணர்வீர்கள். தைரியமாயிருங்கள். திகையாதிருங்கள், கலங்காதிருங்கள், நீங்கள் போகும் இடமெல்லாம் உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களோடே இருக்கிறார் (யோசுவா 1:9) என்றும் கூறுகிறது. ஈசாக்கு தன் மனைவிக்காக காத்திருந்தபோது, தன் வாழ்க்கையைக் குறித்த தேவ திட்டத்தை தியானித்துக் கொண்டிருந்தான். தேவன் ஏற்ற பெண்ணை தரவேண்டும் என்று ஜெபித்துக்கொண்டிருந்தான் (ஆதியாமம் 24:63). அவன் தியானித்துக்கொண்டிருந்தபோதே, அவன் மனைவி ஒட்டகங்களைக் கூட்டிக்கொண்டு வந்துகொண்டிருந்தாள். தேவன் ஏற்ற வாழ்க்கைத் துணையை உங்களுக்குத் தருவார். அவரது வார்த்தையை வாசித்து தேவ நன்மையை தியானித்து களிகூருங்கள். நீங்கள் களிகூரும்போது, தேவனுடைய வார்த்தை உங்கள் வாயிலிருந்து வரும்; ஏறெடுக்கப்படும் வேண்டுதலுக்கு தேவனிடமிருந்து பதில் வரும். உங்கள் இருதயம் பற்றியெரியும்; உங்கள் நாவினால் பேசுவீர்கள். வேதம், நீங்கள் ஆண்டவரை தியானிக்கும்போது, பதில் கிடைக்கும் என்று கூறுகிறது.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, நான் தியானிக்கும் தியானமும் ஏறெடுக்கும் வேண்டுதலும் எப்போதும் உமக்குப் பிரியமானதாக இருப்பதாக. என் கவலைகள் எல்லாவற்றையும் உம் பாதத்தில் வைத்துவிட்டு, நீர் நல்ல தேவன், என் இரட்சகர், எனக்கு வேண்டியவற்றை அருளிச்செய்கிறவர், ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துணை என்ற சத்தியத்தில் இளைப்பாறவும் கற்றுத்தாரும். என்னை நேர் வழியில் நடத்துவதற்கு நீர் உண்மையுள்ளவர் என்று நம்பி உம் சமுகத்தில் எப்போதும் என் இருதயம் களிகூருவதாக. பரிசுத்த ஆவியானவரே, என் மனதையும் எண்ணத்தையும் உம்முடைய நன்மையால் நிரப்புவீராக. என் வாயின் வார்த்தைகள் உமக்குப் பிரியமானவையாக இருப்பதாக. குறை கூறுகிற அல்லது பயப்படுகிற இருதயத்தோடு அல்லாமல் நன்றியுள்ள இருதயத்திலிருந்து என் பிரார்த்தனைகள் புரண்டு வருவதாக. என் ஜெபத்திற்குச் செவிகொடுப்பதற்காகவும், எனக்குச் சமீபமாய் இருப்பதற்காகவும், நேர்த்தியானவிதத்தில் பதில் அளிப்பதற்காகவும் உமக்கு நன்றி செலுத்தி இயேசுவின் விலையேறப்பெற்ற நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.