அன்பானவர்களே, உங்களுக்கு என் அன்பான கிறிஸ்துமஸ் வாழ்த்துகள். "தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்" (யோவான் 3:16) என்பதே இன்றைக்கான வாக்குத்தத்தமாகும். சிறுமையான உங்களை தேவன் மிகவும் நேசிக்கிறார். முழு உலகத்தையும் ஆண்டவர் நேசிப்பதாக நினைப்பதற்கு அப்பால் தனிப்பட்டவிதத்தில் உங்களை நேசிக்கிறார். அதற்காகவே அவர் தம் குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை கொடுத்தார். தேவன் அருளிய சொல்லிமுடியாத ஈவாகிய இயேசு கிறிஸ்துவுக்காக அவரை ஸ்தோத்திரிப்போம். கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தில் நாமெல்லாரும் புத்தாடைகளை வாங்குவோம். மூன்று சட்டைகள் வாங்கினால் ஒரு சட்டை இலவசம் என்பதுபோன்ற அறிவிப்புகளை அடிக்கடி பார்க்கிறோம்.இலவச சட்டையை வாங்கும்போது மிகவும் மகிழ்ச்சியடைவோம். எல்லாவற்றிலும் சிறந்ததான வெகுமதியாக தம் குமாரன் இயேசுவையே தந்திருக்கும் தேவன்பேரில் எவ்வளவு நன்றியுடன் நாம் இருக்கவேண்டும்! உங்கள்பேரில் கொண்ட அன்பினிமித்தம் ஆண்டவர் இயேசுவை உங்களுக்குத் தந்திருக்கிறார். தேவன் உங்கள்பேரில் ஸ்திரமான அன்பு கொண்டிருக்கிறார் என்பதற்கு ஆதாரம் அதுதான்.
ஒருமுறை தென் அமெரிக்க கண்டத்தில் கடற்கரையோரமாக ஒரு கப்பல் சென்று கொண்டிருந்தது. "தண்ணீர் தேவை. நாங்கள் சாகிறோம்," என்ற செய்தியை அருகில் கடந்துசென்ற கப்பலுக்கு அது அனுப்பியது. அடுத்தக் கப்பல், "மொண்டு கொள்ளுங்கள். அமேசான் ஆற்றின் முகத்துவாரத்தில்தான் இருக்கிறீர்கள்" என்று பதில் அனுப்பியது. அவர்களைச் சுற்றிலும் நன்னீரே எங்கும் இருந்தது. மொண்டு கொள்ள மாத்திரமே செய்யவேண்டும். ஆனாலும், உப்புத் தண்ணீருக்குள் இருப்பதாக நினைத்து அவர்கள் தாகத்தினால் மரித்துக்கொண்டிருந்தார்கள். எத்தனை முறை ஆண்டவர் எப்போதும், விசேஷமாக உபத்திரவத்தின் காலத்தில் நம்மோடிருக்கிறார் என்பதை அறியாதிருக்கிறோம்? "ஆண்டவரே, நீர் எங்கே இருக்கிறீர்? நான் செத்துக்கொண்டிருக்கிறேன்," என்று தேவனை நோக்கிக் கூப்பிடுகிறோம். அன்பானவர்களே, இயேசு நமக்கு மிகவும் சமீபத்தில் இருக்கிறார்; அதை அறியாமல் நாம் அழிந்துபோக தேவையில்லை.
நாம் இறங்கி, பருகி, வாழ்ந்திருக்கவேண்டும்.இந்த உலகத்தில் ஒருவரும் கெட்டுப்போகக்கூடாது என்ற அளவுக்கு தேவன் அதிகமாய் நேசித்தார். நம்மை இரட்சிக்கும்படியாக தம் ஒரேபேறான குமாரனை அனுப்பினார். நாம் அவரைத் தேடவேண்டும்; அணுகவேண்டும்; கண்டுபிடிக்க வேண்டும் என்பதற்காகவே தேவன் அப்படிச் செய்தார். இயேசு நமக்கு தூரமானவரல்ல. அவர் நமக்கு மிகவும் சமீபமாக இருக்கிறார். நீங்கள் அதில் மொண்டு கொள்வீர்களா? இயேசுவை நோக்கிப் பார்ப்பீர்களா? அன்பானவர்களே, அவர் உங்களை வாழ வைப்பார். நீங்கள் குறைவினால் சாக தேவையில்லை. இந்த உலகில் யாரும் அழிந்துபோக ஆண்டவர் விரும்பவில்லை. அவர் உங்களைச் சாக அனுமதிக்கமாட்டார். நீங்கள் பிழைப்பீர்கள். இயேசுவினால் நீங்கள் வாழ்வீர்கள்.
ஜெபம்:
அன்புள்ள பரம தகப்பனே, நான் நித்திய ஜீவனைப் பெறும்படியாக உம் ஒரே குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை உலகிற்கு அனுப்பியதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். உலகத்தில் ஒருவனா(ளா)க அல்லாமல் உமக்கு அருமையான பிள்ளையாக தனிப்பட்டவிதத்தில் என்னை நேசிப்பதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன்.ஆண்டவரே, உம் அன்பின் ஆழத்தை உண்மையாய் புரிந்துகொண்டு, சொல்லிமுடியாத ஈவாகிய இயேசுவுக்கு நன்றியுடன் வாழ எனக்கு உதவி செய்யும். நான் நினைக்கிறதற்கும் அதிகமாய் நீர் எனக்குச் சமீபமாயிருக்கிறீர் என்பதை எனக்கு நினைவுப்படுத்தும். உம்மிடம் வரவும், ஜீவத்தண்ணீரான நதியில் ஆழமாக இறங்கி அருந்தவும், உம் சமுகத்தில் ஜீவனைக் கண்டுகொள்ளவும் எனக்குக் கற்றுத்தாரும். இயேசு என் வாழ்க்கையில் இருக்கும்போது, வாழ்க்கைக்கு தேவையான எல்லாமும் என்னிடம் இருக்கும்படியாக என் இருதயம் எப்போதும் உம்மேல் நம்பிக்கையாயிருப்பதாக. இயேசுவால் நான் பிழைத்திருப்பேன் என்ற நிச்சயத்தை தருவதற்காக உம்மை ஸ்தோத்திரித்து அவரது வல்லமையான நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


